உலகநாயகன் கமல் தற்போது விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு பது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
மேலும் இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே கடந்த நான்கு வருடங்களாக கமலின் படங்கள் வெளியாகாமல் ஏக்கத்தில் இருந்த கமல் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது விக்ரம் திரைப்படம்.
அதைத்தொடர்ந்து கமல் பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார். ஷங்கரின் இயக்கத்தில் துவங்கி கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை கமல் தற்போது மீண்டும் துவங்கியுள்ளார். இதையடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிப்பையும் தாண்டி ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் பல படங்களை தயாரித்து வருகின்றார். சிவகார்த்திகேயன், உதயநிதி நடிக்கும் படங்களை தயாரிக்கும் கமல் நடிகர் சிலம்பரசனின் படத்தையும் தயாரிப்பதாக தகவல் வந்தது. ஆனால் இத்தகவல் உறுதிப்படுத்தாமலே இருந்தது.
இந்நிலையில் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல் வருகை தருவதை அடுத்து இவர்கள் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது