புதுச்சேரியில் குடிசை மாற்று வாரியத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது .
நிலுவையில் உள்ள 10 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்துள்ளனர் .
ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அமர்ந்து நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர் .
இது குறித்து ஊழியர் பழனி கூறுகையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு கடன் வசதிகளை குடிசை மாற்று வாரியம் மூலம் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

தினந்தோறும் பணி புரியும் தங்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இது சம்பந்தமாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உடனடியாக அரசு சம்பளத்தை வழங்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.