திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சத்திரக்கட்டளையிலிருந்து புதுப்பத்தூர் ஆற்றுப்பாலம் வரை உள்ள தார் சாலை என்பது இரண்டு கிலோமீட்டர் நீளமுடையது.இந்த சாலை கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த சாலையை கடந்து தான் வேளாங்கண்ணி ஆந்தகுடி உள்ளிட்ட பல ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டி இருக்கிறது.
குறிப்பாக இந்த சாலையில் தினமும் இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் நடக்கின்றது.இது குறித்து இந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினரான ஆனந்தி என்பவர் முதல்வரின் தனி பிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.அந்த மனுவில் புதிய சாலையாக அமைத்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோரிக்கை மனுவிற்கு அளித்துள்ள பதில் கடிதத்தில் கடந்த 29.11.2021 அன்று அப்பகுதியில் நேரடி ஆய்வு செய்ததில் கடந்த 2021 நிதியா ண்டில் உலக வங்கியின் உதவியுடன் சத்திரக்கட்டளையில் இருந்து திருப்பத்தூர் வரை உள்ள தார் சாலையானது புதிதாக போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த பதில் என்பது உண்மைக்கு புறம்பாக உள்ளதாகவும் இதுவரை கடந்த 22 ஆண்டுகளில் இந்த சாலையானது புதிதாக போடப்படவில்லை எனவும் இப்பகுதி மக்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
எனவேசாலைக்கு பதில் வேறு சாலை போடப்பட்டு இந்த சாலை என்று கணக்கு காட்டப்பட்டதா?அல்லது இந்த சாலை போடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டதா?அதே போன்று இந்த சாலைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது போன்ற விபரங்கள் தெரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கொடுத்துள்ள விளக்கத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் தாங்கள் எந்தவித சாலை பணியையும் மேற்கொள்வதில்லை என்றும் அது தங்கள் துறையின் கீழ் வரும் சாலை இல்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த சாலைக்கு முன்பாகவே தங்கள் நெடுஞ்சாலைத்துறை உட்பட்ட எல்லை முடிவதாகவும் அதற்கான அறிவிப்பு பலகையும் அந்த இடத்தில் வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.