ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டிகேஜி சாலையில் உள்ள பாஃப்லியாஸின் டூனர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவின்போது பெரிய பாறை ஒன்று வீட்டின் மீது உருண்டு விழுந்ததில் வீடு இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்திய ராணுவத்தின் 48 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினரும் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த இடிபாடுகளில் சிக்கி இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு சூரன்கோட்டில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில், நசீம் அக்தர் (35) மற்றும் அவரது மகள் ரூபினா கௌசர் (12) ஆகியோர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். மேலும் நசீமின் கணவர் முகமது லத்தீப் (40) ஆபத்தான நிலையில் ராஜோரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியரின் மகன் பஷரத் குணமடைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.