கோவையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ குட்கா பொருட்களை தூத்துக்குடி மத்திய பாகம் காவல்துறையினர் கைப்பற்றினர். குட்காவுடன் காரில் வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி- எட்டையபுரம் சாலையில், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் துணை ஆய்வாளர்கள் முருகபெருமாள், முத்துகிருஷ்ணன் கண்காணிப்பில் மத்திய பாகம் காவல்துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து வந்த சொகுசு காரை சோதனை செய்ததில், அதில் சுமார் 250 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் 1.5 லட்சம் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காரில் சாக்கு பையில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த அருள்ராஜ் மகன் ராஜ்குமார், ராமச்சந்திரன் மகன் முத்துராஜ், பெருமாள் மகன் பெரியசாமி, காளிமுத்து மகன் வேல்முருகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மத்திய பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.