சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் அசோக்(30). இவர் கடந்த 25ஆம் தேதி சாதாரண உடையில் தனது இருசக்கர வாகனத்தில் சின்ன திருப்பதி அருகே சென்று கொண்டிருந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 5 இளைஞர்கள், அவரை மோதுவது போல அதிவேகமாக வந்தனர். இதனால் காவலர் அசோக், அவர்களை கண்டித்தார். அப்போது, அவருக்கும், இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்கும் வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், காவலர் அசோக்கை சரமாரியாக தாக்கினர். அவர் தான் ஒரு காவலர் என்று கூறியபோதும், அந்த இளைஞர்கள் அவரை துரத்திச் சென்று சரமாரியாக அடித்துள்ளார்.

இதில் காவலர் அசோக்கின் கையில் முறிவு ஏற்பட்டது. இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கையும் கலுமாக பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காவலர் அசோக்கை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், பிடிபட்ட 4 பேரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் கீழ் அவர்கள் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (20), ரியான் பாஷா(19), அஸ்லாம் அலி(20), ரிகான் பாஷா (20) என்பதும் மற்றும் தப்பியோடியவர் ரிஸ்வான் என்பதும் தெரியவந்தது.

மேலும், அப்துல் ரகுமான், 53-வது வார்டு கவுன்சிலர் ஷாதாஜின் மகன் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே, காவலர் அசோக்கை, இளைஞர்கள் தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.