75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு, ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பிரேமானந்தன் ஆகியோர் உட்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 62 காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை உட்பட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 138 பயனாளிகளுக்கு 83 லட்சத்து 39 ஆயிரத்து 992 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், திட்ட அலுவலர் சரவணன், கலால் அலுவலர் செல்வநாயம், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், தூத்துக்குடி மாநகர டி.எஸ்.பி சத்யராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சத்யநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.