துபாயிலிருந்து பெருமளவு தங்கம் சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், தனிப்படை அமைத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 3 பயணிகள் மற்றும் இன்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த 6 பயணிகள் உட்பட 9 பயணிகளை சந்தேகத்தில் நிறுத்தி வைத்து சோதனையிட்டனா். இந்த 9 பயணிகளும் சுற்றுலா பயணிகளாக துபாய்க்கு போய் விட்டு திரும்பி வந்தவர்கள். இவர்களிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள்.
இதை அடுத்து அவர்கள் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர். அப்பொழுது அவர்களுடைய உள்ளாடைகள், பேண்ட் பாக்கெட்டுகள், மற்றும் அவர்கள் வைத்திருந்த அட்டைப்பெட்டிகள் போன்றவைகளை அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனையிட்டபோது, பெருமளவு தங்க கட்டிகள் மற்றும் தங்க பசைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இவர்களிடம் இருந்து மொத்தம் 5 கிலோ 267 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 2.5 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், 9 பயணிகளையும் கைது செய்தனர். இவர்கள் 9 பேரும் சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள்.இவா்களை குருவிகளாக துபாய்க்கு அனுப்பி, தங்க கடத்தலில் ஈடுபடுத்திய, முக்கிய கடத்தல் ஆசாமிகள் யார்? என்று சுங்க அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
