கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது குரங்கம்மை என்னும் புதிய நோய் உலகை தாறுமாறாக அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த மோசமான குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் கோர தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு எச்சரித்துள்ளது.
இந்தியாவையும் அந்த நோய் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே இந்தியாவில் 9 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கேரளா மற்றும் டெல்லியில் தலா 4 பேருக்கும் தெலங்கானாவில் ஒருவருக்கும் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 வயதான இளம்பெண் ஒருவருக்கு குரங்கம்மைக்கான அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து அவரது மாதிரிகள் நேற்று பரிசோனைக்கு அனுப்பப்பட்டது.
அந்த முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அந்த பெண்ணுக்கு குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது . குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறு எந்த நாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் பயணம் மேற்கொண்டதாகவும், அதில் இவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் மரண பீதியில் உள்ளனர்.