ஆலங்குளம் காமராஜர் நகரில் வசிப்பவர் திருமலை முருகன். கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு அவரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். அவர் வந்து பார்த்தபோது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடப்பாரை கொண்டு வீட்டு முகப்பு கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டிலிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட பீரோக்களை உடைத்து அதிலிருந்த 1.60 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 140 கிராம் எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 9 லட்ச ரூபாய் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களைத் திருப்பி வைத்த கொள்ளையர்கள் சிசிடிவி பதிவுகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றது தெரியவந்தது. அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.