ஓசூர் அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகள் சேகரித்த 150 நாடுகளின் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாணய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நாணய கண்காட்சியில் 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், தற்போது புழக்கத்தில் இல்லாத, பயன்படுத்த படாத ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்திய நாட்டின் பழங்கால நாணயங்கள் மற்றும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் புதிய நாணயங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளின் நாணயங்கள் ரூபாய் நோட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.
இந்த நாணய கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அனைத்தும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் சேகரித்தவை. நாணய கண்காட்சியை பார்வையிட்ட மாநகர மேயர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளி மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினர்.