தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களிடம் சேகரிக்கும் மக்கும் குப்பையில் இருந்து உயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான லோகோ வெளியிடும் நிகழ்ச்சி மாநகரட்சி அரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து உயிரி உரத்திற்கான லோகோவினை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் தேரடி மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நல்லிணக்க நாளை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் மாநகராட்சி அலுவலர் அனைவரும், சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தூத்துக்குடி மாநகராட்சி மூலம் பொதுமக்களிடம் பெறப்படும் மக்கும் குப்பைகள் உயிரி உரமாக தயார் செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து பயோ டெக்னாலஜி முறை மூலம் உயிரி உரம் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
பயோ டெக்னாலஜி மூலம் தயார் செய்யப்படும் உரம், சாதாரண மக்கும் உரத்தை விட அதிக சத்துள்ளதாக இருக்கும். அதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் தற்போது அதற்கான லோகோ அறிமுகப்படுத்தப்படுகிறது.
மாநகராட்சி மூலம் தயார் செய்யும் உயிரி உரம் கிலோ ஒரு ரூபாய்க்கு பொது மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த உரம், விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டம் வைத்துள்ள பொதுமக்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்றார்.