திட்டமிட்டபடி நாங்கள் சரியாக ஆடினால் நிச்சயம் பதக்கத்தை வெல்வோம் என சென்னை வீரர் பிரக்ஞானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் உரிய கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய ‘பி’ பிரிவு அணியில் இடம் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தாலிக்கு எதிரான நேற்றைய 4-வது சுற்று ஆட்டத்தில் ஆட்டத்தை ‘டிரா’ செய்தார். போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 2-வது போட்டியில் வெற்றி பெற்றாலும் நான் நினைத்த படி சிறப்பாக விளையாடவில்லை. சென்னையில் மிக பிரமாண்டமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் திட்டமிட்டபடி சரியாக விளையாடினால் நிச்சயம் பதக்கத்தை வெல்வோம் என்று கூறியுள்ளார் .