கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி தாலுகா சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதான ‘திம்மப்பா ஹரிஜன்’. இவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த திம்மப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நாணயங்களை விழுங்கி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திம்மப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இதனால் அவரின் குடும்பத்தினர் சிகிச்சைக்காக ராய்ச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது திம்மப்பாவின் வயிற்றில் நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் அந்த நாணயங்களை அகற்றாவிட்டால் திம்மப்பா உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்று டாக்டர்கள் கூறினார்கள். இதையடுத்து திம்மப்பா பாகல்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் வயிற்றில் இருந்த நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் நேற்று அகற்றினர். இந்த அறுவை சிகிச்சையில் அவர் வயிற்றில் இருந்து மொத்தம் 187 நாணயங்களை அகற்றினர். அந்த நாணயங்கள் ஒரு கிலோ எடையில் இருந்தது. திம்மப்பாவின் வயிற்றில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள் 56-ம், 2 ரூபாய் நாணயங்கள் 51-ம், 1 ரூபாய் நாணயங்கள் 80-ம் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது திம்மப்பா நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.