பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த சில தினங்களுக்கு முன் சென்று இருந்தார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில், நாட்டின் உப்பில் 76 சதவீதம் குஜராத்தில் உற்பத்தியாகிறது. நாட்டு மக்கள் அனைவரும் குஜராத்தின் உப்பை உண்கிறார்கள் என்று கூறலாம் என தெரிவித்தார். குஜராத்தின் உப்பு உற்பத்தியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பெருமையாக பேசியதை காங்கிரஸ் கட்சியின் உதித் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ் தனது டிவிட்டர் கணக்கில், திரௌபதி முர்மு ஜி போன்ற குடியரசு தலைவர் எந்த நாட்டுக்கும் வரக்கூடாது. முகஸ்துதிக்கும் எல்லை உண்டு. 70 சதவீத மக்கள் குஜராத்தில் இருந்து உப்பை சாப்பிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. உப்பை தின்று வாழ்க்கை வாழ்ந்தால் உங்களுக்கு தெரியும் என்று பதிவு செய்து இருந்தார். இவரின் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசு தலைவரை அவமதித்ததற்காக உதித் ராஜூம், காங்கிரஸூம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் சம்பிட் பத்ரா கூறுகையில், உதித் ராஜின் முகஸ்தி கருத்துக்கள் அநாகரீகமான, சோகமான மற்றும் கவலைக்குரியது. உதித் ராஜின் கருத்துக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.