ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. பத்து வினாடிகள் நிலம் அதிர்ந்ததால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். பலமனேர், கந்தூர், கங்கவரம், கீழபட்லா, பந்தமிட ஜரவரிப்பள்ளி, குராப்பள்ளி, காந்திநகர், நலசானிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டது. 15 நிமிட இடைவெளியில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.பலத்த சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
சில வீடுகளில் சுவர்கள் சிறிது சேதமடைந்தன. கடந்த காலங்களிலும் சித்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது, நிலநடுக்கத்தால், எடிகப்பள்ளி, சிலகாவரிப்பள்ளி, சிகாரு, குடவாரிப்பள்ளி ஆகிய பகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும் இந்தமுறை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.