நடிகர் சித்தார்த் பெரும்பாலும் சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்த கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்துபவர். அண்மையில் பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு சித்தார்த் பதிவிட்டிருந்தது இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதனையடுத்து ட்விட்டர் தளத்தில் இருந்து ஒதுங்கினார் சித்தார்த். இந்நிலையில் நடிகை அதிதிராவ், சித்தார்த் இருவரும் காதலிப்பதாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர்.

இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது.இந்நிலையில், அதிதிராவ் பிறந்த நாளையொட்டி அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ‘என் இதய ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று அவருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.