விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிகப்பிரம்மாண்டமாக உருவான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. சமீபகாலமாக விக்ரமின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இப்படம் விக்ரமை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இம்முறையும் விக்ரம் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சில தினங்களுக்கு முன்பு வெளியான கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஸ்வாரஸ்யமில்லாத திரைக்கதை, சலிப்புத்தட்டும் காதல் காட்சிகள் என படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக படத்தின் நீளம் மிகப்பெரிய குறையாக பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் கோப்ரா திரைப்படம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஓடும் படமாக திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து எழுந்த விமர்சனங்களால் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் அமோகமாக இருந்த நிலையில் இரண்டாவது நாள் வசூல் பாதிக்கும் மேலாக குறைந்துள்ளது.
கோப்ரா படம் ரிலீஸான இரண்டாவது நாள் வெறும் ரூ. 5.50 கோடி தான் வசூல் செய்திருக்கிறது. இது முதல் நாள் வசூலை விட 3 மடங்கு குறைவாகும். வார இறுதி நாட்களில் தியேட்டர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படி இல்லை என்றால் கோப்ராவின் நிலை கவலைக்கிடம் தான்.
இந்நிலையில் விக்ரம் நடிப்பில் இம்மாதம் வெளியாகும் பொன்னியின் செல்வன் படமாவது அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லுமா என ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது