சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் . மேலும் ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடரும் என்றும் உத்தரவிட்டார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ பி எஸ் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று இ.பி.எஸ்-க்கு அழைப்பு விடுத்தார். இருப்பினும் அவரது அழைப்பை இ.பி.எஸ் நிராகரித்தார். உடனே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் சுந்தர் மோகன் மற்றும் துரைசாமி அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக அன்றைய நாளே அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.