அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது . இதில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதனால் அந்த இடம் கலவர பூமியாக மாறியது இந்த அசாதாரண சூழலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அதிமுக அலுவலக சீலை அகற்றக் கூறிய வழக்கில் எடப்பாடி பழனிசாமிடம் தலைமை அலுவலக சாவியை வழங்க உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், வழக்கை ஒரு வாரத்திற்கு பிறகு விசாரிப்பதாகவும் கூறி உத்தரவிட்டனர். மேலும் , எதிர்மனுதாரர்கள் மற்றும் சீல் வைத்த வருவாய்த் துறையினருக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது .