Skygain News

தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்களை பணி நியமனம் செய்வது இந்தி திணிப்பின் உச்சம்..! சீமான் காட்டம்…

தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகளில் தமிழ் தெரியாத பிறமாநிலத்தவரை அதிக அளவில் பணி
நியமனம் செய்யும் செயல் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. மக்களின் முக்கிய சேவை துறைகளில் தமிழ் தெரியாதவர்களை வேண்டுமென்றே பணி நியமனம் செய்யும் மத்திய அரசின் இந்த ஆணவ செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

சென்னை அசோக் நகரில், காவலர் பயற்சிக்கல்லூரி எதிரில் உள்ள ‘இந்தியன் ஓவர்சீஸ்’ வங்கியில் தொடர்ந்து தமிழ் தெரியாத பிற மாநில அதிகாரிகளே மேலாளர்களாக நியமிக்கப்படுவதால் வங்கி சேவையைப் பெறுவதில் அடித்தட்டு, ஏழை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

இந்தி மொழி தெரியாத பாமர தமிழர்களை, வடநாட்டு அதிகாரிகள் ஆணவத்தோடு, அவமதிக்கும் நிகழ்வுகள் தொடர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மிகுந்த ஆத்திரத்தையும், கோவத்தையும் ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சிறுகடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வகையான கூலித்தொழில்கள் என எல்லா பணிவாய்ப்புகளும் இலட்சக்கணக்கில் வடமாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள என்.எல்.சி, எல்.ஐ.சி, பி.எச்.இ.எல் உள்ளிட்ட இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவரே பல்லாயிரக்கணக்கில் பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

இதனால் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோவதோடு, தமிழர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் பொருளாதாரமும் கொள்ளைபோகிறது. மேலும் தமிழகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற குறைந்தபட்ச ஊதிய உரிமையும் பறிபோய் வர்க்க பாகுபாட்டில் தமிழகம் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் அவலச்சூழலும் ஏற்படுகிறது.

வடமாநிலத்தவர் நிரந்தரமாகக் குடியேறுவதால் தமிழர்களின் பண்பாடு, வழிபாடு என அனைத்தும் பேரழிவை நோக்கிச் செல்கிறது. அதுமட்டுமின்றி, குடியேறிய சில மாதங்களிலேயே குடும்ப அட்டை முதல் வாக்காளர் அட்டை வரை அனைத்தையும் பெறுவதால் தமிழர்களின் அரசியல் அதிகாரமும் முற்றாக வடவரிடம் பறிபோகும் நிலை ஏற்படுகிறது.

வங்கி, அஞ்சலகம் உள்ளிட்ட மக்கள் தொடர்புத்துறைகளில் தமிழ் தெரியாத வடமாநில அதிகாரிகளை வேண்டுமென்றே நியமிப்பதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களை மறைமுகமாக இந்தி கற்க வேண்டிய நெருக்கடி நிலைக்கு ஆளாக்குகின்றனர். குறிப்பாக இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற கடந்த 8 ஆண்டுகளில் இத்தகைய வடவர் திணிப்பு இலட்சக்கணக்கில் பலமடங்கு வீரியமாக அதிகரித்துள்ளது.

வங்கி, அஞ்சலகம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து மக்கள் சேவைத் துறைகளிலும் பணிபுரியும் தமிழ் தெரியாத பிறமாநிலத்தவரைக் கணக்கெடுத்து அவர்களை உடனடியாகப் பணியிடமாற்றம் செய்ய வேண்டுமெனவும், தமிழகத்தில் பணிபுரிய தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருப்பது கட்டாயம் என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டின் தன்னாட்சி, இறையாண்மை மற்றும் தமிழர்களின் வாழ்வுரிமையை அழித்தொழிக்கும் வடவர் திணிப்பைக் கட்டுப்படுத்த நுழைவுச் சீட்டு உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை முழுவீச்சில் எடுக்க வேண்டுமென்று தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More