அப்துல் கலாமின் 91-ஆவது பிறந்த தினம் இன்று. ‘கனவு காணுங்கள்.. உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் லட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்’ என்று ஒரு தலைமுறையினரைத் தட்டி எழுப்பிய தலைவராக வாழ்ந்தவர் தான் அப்துல் கலாம். நமது நாட்டின் உன்னதமான தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்து அங்குள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய அப்துல் கலாமின் வாழ்க்கை பயணம் 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11 வது குடியரசு தலைவ உயரிய பதவியில் அரியணை ஏறும்படியாக மாறியது.
இளமைப்பருவம்
ஏபிஜே அப்துல் கலாமின் முழுப்பெயர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி இராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். வறுமையின் காரணமாக பள்ளி முடிந்ததும், கலாம் செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார்.

ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு ஆண்டு படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். பின்னர் 1955 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி சென்னையில், விண்வெளி பொறியியல் படிப்பிற்காக, சென்னை வந்தார். பின்னர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.
அறிவியல் ஆராய்ச்சி

அப்துல்காலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார்.
அரசியல் பாதையும், ஆசிரியர் பணியும்

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பேராசிரியர், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதுடன், சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணைவருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.