இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5G அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக அதானி குழும நிறுவனம் 212 கோடிக்கு ஏலம் எடுத்தது.

5ஜி ஏலம் நிறைவடைந்துள்ளதால் விரைவில் முக்கிய நிறுவனங்கள் அந்த வசதியை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு வர உள்ளனர்.இந்நிலையில் 6ஜி குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ தொடக்க நிகழ்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி, 2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை நாட்டில் தொடங்கப்படும். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன என்றார்.
