சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் வெள்ளைக்காடாக மாறி இருக்கின்றன. மேலும் பல பகுதிகள் ஆறு மற்றும் குளங்கள் போல் தண்ணிர் தேங்கி காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் இருப்பதால் இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக மூழ்கி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலான சாலைகள் குளம் போல் இருப்பதால் மக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த மலை நீரில் சாலையில் சென்று பாதி தூரத்திற்கு மேல் செல்ல முடியாமல் வாகனங்கள் பழுதடைந்து பலரும் வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்கின்றனர். சிலர் தள்ள முடியாமல் அப்பகுதியிலேயே ஓரமாக நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள்.

இதை தொடர்ந்து சென்னை வியாசர்பாடியில் உள்ள சுரங்க பாதை வழியாக நேற்று பேருந்து சென்ற போது அங்கு ஆறு போல் ஓடிய மழை நீரை கடக்க முயன்ற போது பாதி தூரத்திற்கு மேல் செல்ல முடியாமல் பேருந்து சிக்கியது. அந்த மாநகரப் பேருந்துக்குள் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ள நிலையில் அவர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ரப்பர் படகுகள் மற்றும் கயிறுகள் கொண்டு அந்த 25 பயணிகளையும் மீட்டு உள்ளனர். மேலும் சென்னையில் பல்வேறு சுரங்கப்பாதைகளையும் மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நேற்று சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தொடர் மழையினால் இன்றைக்கும் சென்னை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.