புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93. நெல்லை சத்திர புதுகுளத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம் காந்தியின் சுயசரிதையை முதல் முதலாக அவர் வில்லுப்பாட்டாக பாடியவர். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் 19 படங்கள் மற்றும் நாகேஷின் 60 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதி கொடுத்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டில் சுப்பு ஆறுமுகத்துக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. அத்துடன் 2021ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற வில்லிசைப் பாட்டுக் கலைஞர் ‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் (93) அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வேதனையடைகிறேன்.இளமைக்காலம் முதலே தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையான வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்று “வில்லிசை வேந்தர்” எனப் போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம் அவர்கள். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகர் நாகேஷ் ஆகியோரின் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை அவர் செய்துள்ளார். மூத்த கலைஞரான திரு. சுப்பு ஆறுமுகம் அவர்களின் இழப்பால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.