நேற்றிரவு முதுகு வலி காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையிருந்து வெளியிட அறிக்கையில் முதலமைச்சருக்கு வழக்கம்போல் ஏற்பட்டுள்ள வலி தான் ஆபத்து ஒன்றும் பெரிதாக இல்லை என்று தெரிவுத்துள்ளது. மருத்துவமனைக்கு முதலமைச்சர் வந்ததால் அதிக எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னுக்கு செல்லவிருந்தார். இந்நிலையில் திடீர் என்று உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல்வர் ஸ்டாலின் தேவர் குருபூஜைக்கு நேரில் செல்வாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நாளை பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளமாட்டார் என அரசு செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,முதலமைச்சர் அவர்களுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, வரும் 30-10-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில், மூத்த அமைச்சர்களான மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு,மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.