தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 10 நாட்களில் அகற்றவில்லை என்றால் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறிய உத்தரவை தமிழக அரசு 10 நாள்களில் அமல்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு 10 நாள்களில் அமல்படுத்தவில்லை என்றால் தலைமை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாததால், அதிகாரிகளுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.