கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் உள்ள கழிவறையில் ஆண் குழந்தையின் சடலம் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து உடனடியாக மருத்துவ போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார் விசாரணையை தொடங்கினர். அத்துடன் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு குழந்தை பிறந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியிடம் நடத்திய விசாரணையில் மாணவியின் உறவினரின் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் நிலையில் அவர்தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் என்று மாணவி தெரிவித்துள்ளார். வயிற்றுவலி ஏற்படவே கழிவறைக்கு சென்ற மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.

என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு மாணவி சென்றுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான பத்தாம் வகுப்பு மாணவர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அத்துடன் மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.