22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 72 நாடுகளில் இருந்து சுமார் 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதில், தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.

இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் களம் கண்டு வருகின்றனர் .
அதன்படி ,பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சாணு தங்கப்பதக்கம் வென்றார். 55 கிலோ எடைப்பிரிவு கொண்ட மற்றொரு போட்டியில் பிந்தியா ராணிதேவி 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 55 கிலோ எடை பிரிவில் சங்கட் சர்கார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 61 கிலோ எடைப்பிரிவில் குருராஜா பூஜாரி 269 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அச்சின்தா ஷூலி பளுதூக்குதலில் தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், பளுதூக்குதலில் மேலும் ஒரு பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது . மகளிருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் ஹர்ஜீந்தர் கவுர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். ஸ்னாச்சில் 93 கிலோவையும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 119 கிலோவையும் தூக்கி 3வது இடம் பிடித்தார். பளுதூக்குதலில் இந்தியாவுக்கு இது 7 பதக்கம் ஆகும்.
