கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்காக என்.எல்.சி.யை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சி.யின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர மறுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை அல்லது நிதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஆசை காட்டியிருக்கிறது.
என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலங்கள் சுமார் 25,000 குடும்பங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ள 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் வழிகாட்டுதலில் தான் அனைத்து பணிகளும் நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதே அமைச்சர்கள் தான் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.