இந்திய அணியின் முன்னாள் வீரரும், புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என கூறியுள்ளார். மேலும் அவர்தான் அடுத்த தோனி என்றும் தன் கருத்தை தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
சமீபகாலமாக ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் பல மடங்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்தாண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று கோப்பையை கைப்பற்றினார் ஹர்திக். அதைத்தொடர்ந்து இந்திய அணிக்கும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “ஹர்திக் பாண்டியா கேப்டனாக வர வேண்டும். அவர்தான் அடுத்த கேப்டன் என்று நான் கருதுகிறேன்.. தோனி மாதிரியான வீரராக பாண்டியா மாறிவிட்டார். அவர் மிக அமைதியாகவும் இருக்கிறார். நன்றாக பேட்டிங்கும் செய்கிறார்.மிகவும் கடினமாக உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் இந்தியாவின் கேப்டனாவதை நான் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதும், ஐபிஎல் போட்டியின்போதும் அவர் தனது குணாம்சத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.
இந்திய அணியின் கேப்டனாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளையும், திறன்களையும் அவர் பெற்றிருக்கிறார்” என கூறியுள்ளார்.இந்நிலையில் ஹர்பஜன் சிங் கூறிய கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.