தமிழகத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரப்பின்படி சீல் அகற்றப்பட்டு சாவி எடப்பாடி பழனிசாமி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக பொது குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே வந்தது .
இந்நிலையில் கிட்டதட்ட 70 நாட்களுக்கு பிறகு நேற்று எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்றிரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் வராக சாமியை வழிபட்ட பின் திருமலையில் இரவு தங்கினார். இதையடுத்து இன்று காலை விஐபி தரிசனம் மூலம் கோயிலுக்கு சென்று குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.