தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான நானே வருவேன் திரைப்படம் செப்டெம்பர் 29 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. மயக்கம் என்ன படத்திற்கு பிறகு 11 ஆண்டுகள் கழுத்து இக்கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
ஆனால் செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியாகவுள்ளது.இதன் காரணமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இரு பெரிய படங்கள் ஒரே சமயத்தில் வெளியானால் அது இரு படங்களின் வசூலுக்கு பாதிப்பை உண்டாக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிலர் பொன்னியின் செல்வன் படத்தோடு நானே வருவேன் படம் எதற்காக வெளியாகின்றது, ஒரு வாரத்திற்கு பிறகு வெளியானால் தான் என்ன எனவும் கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் இதற்கெல்லாம் நானே வருவேன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, நாங்கள் பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டிபோட நினைக்கவில்லை. பண்டிகை நாட்களில் வரும் விடுமுறையை எண்ணியே நாங்கள் நானே வருவேன் படத்தை வெளியிடுகின்றோம்.அடுத்த வாரம் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் அதை கருத்தில் கொண்டே நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்கின்றேன். இதே போல தான் அசுரன் படத்தையும் பண்டிகை நாட்களில் ரிலீஸ் செய்தேன் என்றார் தாணு.