தமிழ் சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் போன நடிகராக வலம் வருபவர் நடிகர் அருள் நிதி. இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் தேஜாவு.
பொதுவாக அருள்நிதியின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதீத நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு கலந்து இருக்கும். இதுவரை அருள்நிதி நடிப்பில் வெளிவந்த பல படங்கள் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கி இருந்தாலும் , தேஜாவு திரைப்படம் சற்று வித்தியாசமான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் கொண்டிருந்தது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதா? இல்லையா? எனபதை வாங்க பார்க்கலாம்.

கதையாசிரியராக இருக்கும் சுப்ரமணி தான் எழுதும் கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் மனிதர்காளாக வந்து தன்னை மிரட்டுவதாக காவல் துறையில் புகார் ஒன்றை கொடுக்கிறார். இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை, சுப்ரமணியை கைது செய்ய அவர் வீட்டிற்கே செல்கிறது போலீஸ். இவர் கதையில் எழுதியிருந்தது போல், பூஜா எனும் பெண் ஒருவர் மூன்று மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். அவ்வாறு கடத்தப்பட்ட பூஜா, டி.ஐ.ஜி ஆஷா ப்ரோமோதின் மகள் என்பதால் இந்த விஷயம் ஊடங்களில் சென்சேஷன் ஆகிறது. தனது மகள் கடத்தப்படவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டு, மறைமுகமாக தனது மகளை தீவிரமாக தேட துவங்குகிறார் மதுபாலா.

இதற்காக அண்டர்கவர் அதிகாரியான விக்ரமை ( அருள்நிதி ) நியமனம் செய்கிறார். ஒரு புறம் இதெல்லாம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு புறம் இதை அனைத்தையும் நேரில் இருந்து பார்த்தபடி அப்படியே கதையாக எழுதிக்கொண்டிருக்கிறார் சுப்ரமணி. இறுதியில் பூஜாவை விக்ரம் கண்டுபிடித்தாரா? இல்லையா? சுப்ரமணி எழுதிய கதையின் முடிவு தான் என்ன? கதையில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதா ? என்பதே இப்படத்தின் மீதி கதை.
வழக்கம் போல் திரில்லர் கதைக்களத்தில் சிறப்பான தரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார் அருள்நிதி. இவருடைய நடிப்பு நம்மை படத்தை விட்டு நகரவிடாமல் பார்த்துக்கொள்கிறது. டி.ஐ.ஜி ஆஷா ப்ரோமோதாக வரும் நடிகை மதுபாலா, நேர்த்தியாக நடித்து அனைவரையும் கவருகிறார். கதையாசிரியராக வரும் நடிகர் அச்யுத் குமார் ஒவ்வொரு நொடியும் படத்தை விறுவிறுப்பூட்டுகிறார்.
அச்யுத் குமாரின் லிப் சின்க்கிற்கு ஏற்றபடி அருமையாக டப்பிங் பேசியுள்ளார் நடிகர் எம். எஸ். பாஸ்கர். பூஜாவாக நடித்துள்ள நடிகை ஸ்ம்ருதி வெங்கட் தனக்கு கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். குறைவான காட்சியில் வந்த மனதில் பதிகிறார் காலி வெங்கட். அறிமுக படத்திலேயே சிறந்த முயற்சியை கையாண்டுள்ளார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.
வலுவான கதைக்களம் விறுவிறுப்பூட்டும் திரைக்கதை என படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். ஆனால், சில இடங்களில் சற்று லாஜிக் மிஸ்டேக். அது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு மாபெரும் பலம். பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு டக்கர் .
மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய திரில்லர் படமாக அமைந்துள்ள தேஜாவு
3 / 5 என்ற மார்க் கொடுக்கும் அளவிற்கு உள்ளது