ஹன்சிகா மோத்வானி, சிலம்பரசன், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியாகியுள்ள இருக்கும் திரைப்படம் ‘மஹா’(Maha).
ஹன்சிகாவின் 50 ஆவது படமாக வெளியாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பெண் குழந்தைகள் கடத்தல் பற்றி திரை படங்கள் அதிகமாக வருவதை நம்மால் பார்க்க முடிகிறது . அந்த வரிசையில் இப்பொழுது சிம்பு நடித்துள்ள “மஹா” திரைப்படம் வெளியாகி இருக்கின்றன.
கதை விளக்கம்
போதைக்கு அடிமையாகி இருக்கும் ஒருவர் தொடர்ந்து குழந்தைகளை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து வீதியில் வீசி வருகிறார். அந்த கொடூர கும்பலை பிடிக்க துணிச்சலான போலீஸ் அதிகாரியாக களமிறக்கப்படுகிறார் ஸ்ரீகாந்த். இதனிடையே சிலம்பரசனுக்கும், ஹன்சிகாவுக்கும் பிறந்த குழந்தையும் அந்தக் கொலைகாரனால் கடத்தப்படுகிறது. இறுதியில் அந்தக்குழந்தை மீட்கப்பட்டதா இல்லையா..? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

இதுவரை குறும்புத்தமான இளம் நடிகையாக தமிழ் படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, இந்தப்படத்தில் கொஞ்சம் இறங்கி வந்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். குறிப்பாக தான் பெற்ற குழந்தையை தொலைத்துவிட்டு தவிக்கும் காட்சிகளில் அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் . சிலம்பரசன் கதாபாத்திரம் படத்திற்கு ஸ்டார் வேல்யூ வேண்டுமே என்று திணிக்கப்பட்டது போல் தெரிகிறது .

அவருக்கும் ஹன்சிகாவிற்கும் இடையேயான காதலில் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகவில்லை . மீடியம் வெயிட்டில் வரும் சிம்புவையும், அவர் பேசும் பஞ்ச் வசங்களையும் பெரிதாக ரசிக்க முடியவில்லை. ஸ்ரீகாந்த் கொடுக்கப்பட்ட போலீஸ் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். தம்பி ராமையா கதாபாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். இவர்கள் எல்லோரையும் விடவும் சுஜித் ஷங்கர் நடிப்பில் அசத்திருக்கிறார் .

படத்தின் இயக்குநர் ஜமீல் எடுத்துக்கொண்ட கதை களம் மிகவும் பழமையானது என்றாலும், தனது திரைக்கதை வாயிலாக சில இடங்களில் சுவாரசியமாகவும், பல இடங்களில் சுவாரசியமில்லாமலும் கதையை சொல்லியிருக்கிறார். குறிப்பாக சிலம்பரசன் போர்ஷன் சிம்பு ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம். பாடல்கள் பெரிதாக கவனிக்க வைக்க வில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்து இருக்கிறது..
திரைக்கதையில் சுவாரசியமின்மை, சிலம்பரசனின் கதாபாத்திரத்தை ஒழுங்காக கையாளாத தன்மை, சுற்றியுள்ள கதாபாத்திரங்களில் அழுத்தம் இல்லாமை ஆகியவற்றை தவிர்த்திருந்தால் மஹாவை ரசித்து இருக்கலாம்.