கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த இந்திய u19 போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களான ரைனா, ராயுடு, உத்தப்பா என அனைவரும் தங்களது ஓய்வை அறிவித்து விட்டனர். ஆனால் ஒரே ஒரு வீரர் மட்டும் இன்றளவும் போராடி தனது 37 ஆவது வயதில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல நம் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தான்.
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இவரை ரசிகர்கள் அன்போடு டிகே என அழைப்பது வழக்கம். அண்மையில் இந்த அறிவிப்பு வெளியானபோது ‘கனவு பலித்ததே’ என தனது எண்ண ஓட்டத்தை ட்வீட் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.
2007 காலக்கட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனராக களம் கண்டவர். இப்போது ஃபினிஷராக ஒரு ரவுண்டு வந்துக் கொண்டிருக்கிறார். தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி தனது இருப்பை அணியில் உறுதி செய்தார்.

அதன் வழியே அவருக்கு டி20 உலகக் கோப்பை அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிட்டியது. வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக ரன் குவிக்கும் வல்லமை படைத்தவர். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கின்றார்.
Dreams do come true 💙
— DK (@DineshKarthik) September 12, 2022