அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் .
இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில் அவரை மாற்ற கோரி ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தாமாகவே இவ்வழக்கிலிருந்து வெளியேறினார் . இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து அதிமுக பொது குழு தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது . ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் . மேலும் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .