தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி வட மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு தென்காசி, செங்கோட்டை , கடையநல்லூர், ஆலங்குளம், கடையம், குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கன மழை பெய்ததால், குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு பெய்த தொடர் மழையால் நகர்புற சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணர் ஆலயத்தில் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் முழங்கால் வரை தேங்கியுள்ள தண்ணீரில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.