நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிலையில் நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிக வாக்குகள் பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வெற்றிவாகை சூடினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 5.77 லட்சம் வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா – 2.61 லட்சம் வாக்குகளும் பெற்றுளனர். திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பலரும் திரௌபதி முர்முக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு தலைவராக தேந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.