அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டல் விடுத்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சாந்தினி புகார் அளித்தார்.
மேலும் கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், 8 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாவட்டம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாக நடிகை சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார். தன்னை நன்றாக பார்த்துக் கொள்வதாக ஆசை ஆசையாக கூறிவிட்டு ஏமாற்றியதாக புகார் கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயற்சித்துள்ளார்.
தன்னை நன்றாக பார்த்து கொள்வேன் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியதாலேயே அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதாக நடிகை சாந்தினி தகவல் தெரிவித்துள்ளார்.