கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்த நிலையில் அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு, அப்பல்லோ மருத்துவமனை, ஓ. பன்னீர்செல்வம், மற்றும் சசிகலா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை மேற்கொள்ள 13வது முறை ஆணையம் அவகாசம் கோரிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி விசாரணையை நிறைவு செய்தது.

இருப்பினும் எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளிக்காத காரணத்தினால் 14வது முறையாக மூன்று வாரங்கள் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.