புதுடில்லியில் மத நல்லிணக்கத்தினை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் “மத நல்லிணக்க மலர்ப் பேரணி” மற்றும் கலை நிகழ்ச்சிகள் 15.10.2022 அன்று புதுடில்லி மேஹ்ருளி பகுதியில் நடைபெற்றது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மலர்ப் பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பாக 25 கலைஞர்கள் கொண்ட கலைக் குழுவினர் அலங்கார மலர்ப் பதாகைகள் தாங்கி, கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களை, தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையக் குழுவினர் வழங்கிய கலை நிகழ்ச்சி மிகவும் கவர்ந்த வண்ணமாக அமைந்தது. தமிழ்நாடு கலைக்குழுவினருக்கு அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இவ்விழாவில், மாண்புமிகு டில்லி முதலமைச்சர் சார்பில் பங்குபெற்ற, மாண்புமிகு டில்லி மேஹ்ருளி சட்டமன்ற உறுப்பினர் திரு நரேஷ் யாதவ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களை பாராட்டினார். கடந்த ஆண்டுகளில் பங்குபெற்ற மாநிலத்தின் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு பங்கேற்புச் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு (2022) தமிழ்நாடு கலைக்குழுவிற்கு முதல் பரிசு பெற்றதாக தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் திரு.சிவ.சு.சரவணன் மற்றும் புதுடில்லி தமிழ்நாடு இல்ல கூடுதல் உள்ளுறை ஆணையாளர் திரு.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.