சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிதவைகள் அமைத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பருவ மழை தொடங்கியதிலிருந்து நசரத்பேட்டையில் உள்ள தேங்காய் தொடங்கிய மழை நீர் இதுவரை விடவில்லை. இங்குள்ள ஏழு தெருக்கள் முழுவதும் சுமார் மூன்று அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
அத்தியாவசிய தேவைக்கு கூட கடைக்கு செல்ல முடியாத நிலையும் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவ உதவிகள் கிடைக்காமலும் தவித்து வரும் சூழலை இப்பகுதியில் நிலவுகிறது. மேலும் பணிக்கு செல்பவர்களும் பல்லி செல்லும் குழந்தைகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தில் சிக்காமல் இருக்க பெற்றோர்கள் தெர்மாகோலில் மிதவைகளை அமைத்து பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
மேலும் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து விச ஜந்துக்களும் படை எடுப்பதால் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மழை நீரை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பூவிருந்தவல்லி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது தற்போது மூன்று பம்பு செட்டுகள் அமைத்து மழை நீர் அகற்றப்பட்டு வருவதாகவும் மேலும் இரண்டு பம்புகள் அமைத்து தேங்கியுள்ள மழைநீரில் விரைவாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.