Skygain News

கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரண வழக்கு : முதல் தகவல் அறிக்கை வெளியீடு

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது தந்தை ரவி கொடுத்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304 (ஏ), அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்தது என்பதன்கீழ் வழக்குப் பிரிவு மாற்றப்பட்டது.

பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சோம சுந்தர், பால் ராம் சங்கர் மற்றும் சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியும் செய்யப்பட்டது. தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பிரியா மரணம் தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. முதலில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு- 174 இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கிடைத்துள்ளது.

அந்த அறிக்கையில், பிரியாவின் தந்தை ரவி, பெரவள்ளூர் காவல் ஆய்வாளர் சூரியலிங்கத்திடம் கடந்த 15 ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார் என்று பதியப்பட்டுள்ளது. மேலும், தனது மகள் பிரியாவுக்கு கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி கால் மூட்டு வலிக்காக பெரவள்ளூர் பெரியார் நகர் பொது புறநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், பரிசோதனை எடுத்த பிறகு மூட்டில் சவ்வு கிழந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியதாக ரவி கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர் கடந்த 2 ஆம் தேதி பிரியாவை மீண்டும் பெரியார் நகர் அரசு மருத்தவமனைக்கு அழைத்து சென்று போது லேசர் கருவி கொண்டு ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து முடித்து விடலாம் என்று பெரியார் நகர் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி காலையில் பிரியாவை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர். 5 மணி நேரம் கழித்து பிரியா வலது காலில் பெரிய கட்டுகளை கட்டி வெளியே அழைத்து வந்துள்ளனர் என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி உள்ளது.

மேலும் அதில், கால் வலியால் பிரியா துடித்துள்ளார். பிறகு 8ஆம் தேதி 4 மருத்துவர்கள் அவசர அவசரமக வந்து பிரியாவின் காலில் கட்டப்பட்டுள்ள கட்டுகளை அவிழ்த்துள்ளனர். மருத்துவனையின் மூத்த மருத்துவர் ஒருவர் இந்த மருத்துவனையில் போதிய மருத்துவர்கள் இல்லை, மருந்துகள் இல்லை என்று கூறி உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரியாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மாற்றி உள்ளனர். 9ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் பிரியாவின் காலை பார்த்த பிறகு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் செய்த அறுவை சிகிச்சையால் காலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இருக்கமாக கட்டியதால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு கால் அழுகி விட்டதாகவும் ராஜீவ்காந்தி மருத்துவ குழு கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்து வலது கால் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளுக்கு இது போன்று நடந்துள்ளது என்று தந்தை ரவி முதலில் புகார் கொடுத்திருந்தார். பிறகு 15ஆம் தேதி பிரியா இறந்த பிறகு தந்தை ரவி புகாரை மாற்றி கொடுத்தார். இவை அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் பெரவள்ளூர் காவல்துறை பதிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர், துறை ரீதியிலான விசாரணை நடத்தி, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப்பின் பிரியாவிற்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய மருத்துவ கவனிப்பில் ஏற்பட்ட குறைபாடே அவரது இறப்பிற்கு காரணம் என குறிப்பிட்டு காவல்துறையிடம் அறிக்கையை கொடுத்தார். இதனை மையமாக வைத்து வழக்குப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது. பிரியா மரணத்திற்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் 4 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள மருத்துவர்களை தேடி வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More