கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்பட்ட வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான். சமீபகாலமாக அவரின் எழுச்சி பலரையும் பிரம்மிக்கவைத்துள்ளது. ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்றது, பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் பொறுப்புடன் செயல்படுவது என நாளுக்கு நாள் இவரின் திறன் மேம்பட்டு கொண்டே இருக்கின்றது.
அதைத்தான் நாம் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியிலும் கண்டோம். பௌலிங், பேட்டிங் என அனைத்திலும் கலக்கி இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார் பாண்டியா.
கடைசி ஓவரில் மூன்று பந்துகளுக்கு ஆறு ரன்கள் அடிக்கவேண்டிய சூழலில் பதட்டப்படாமல் கூலாக சிக்சரின் மூலம் போட்டியை முடித்தார் ஹர்திக் பாண்டியா. இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா, ஹார்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தது இவருக்காகதான் எனக் கூறியுள்ளார்.
“ஹார்திக் பாண்டியா, தோனியை மிகவும் நேசிக்க கூடிய ஒருவர். தோனியிடம் இருந்துதான் ஹார்திக் பாண்டியா அதிக விஷயங்களை கற்றுள்ளார். எனவே, எந்த விஷயமாக இருந்தாலும் அதனை தோனியைப் போலவே செய்ய வேண்டும் என்றுதான் ஹார்திக் பாண்டியா விரும்புவார். தோனிக்கும், ஹார்திக் பாண்டியாவுக்கும் இடையிலான நட்பு அனைவரும் அறிந்ததே.
தோனிக்காகவே ஹார்திக் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்துக் கொடுத்திருப்பார்” என உத்தப்பா கூறினார்.தோனி எப்போதுமே போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்று, கடைசி நேரத்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைப் பெற்றுக்கொடுக்க விரும்புபவர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தோனி அப்படியே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியா தனது அடுத்த போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.