செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்த்த வினோத்சங்கர் (வயது46) இவர் சித்த மருத்துவ தொழில் செய்து மற்றும் அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலத்தை சேர்ந்த வினோதன் என்பவர் வினோத் சங்கருக்கு பழக்கமானார். அப்போது வினோதன் தன்னிடம் சக்திவாய்ந்த பச்சைநிற மூலிகை கல் இருப்பதாக வினோத்சங்கரிடம் கூறினார். இதனை மூடத்தனமாக நம்பி அந்த மூலிகை கல்லை ஏராளமாக பணம் கொடுத்து வினோத் சங்கர் வாங்கியுள்ளார். அதன் பிறகு போலி மூலிகை கல் என தெரியவந்ததும் அந்த கல்லை வினோத்சங்கர் திருப்பி கொடுத்து விட்டார்.
இதனையடுத்து வினோதன் மீண்டும் தனக்கு தெரிந்த நபரிடம் சக்தி வாய்ந்த கலசம் இருப்பதாக வினோத்சங்கரிடம் தெரிவித்தார். இதையடுத்து அதனை மீண்டும் வாங்க வினோத்சங்கர் தனது அறக்கட்டளையில் பணிபுரியும் 4 பேருடன் புதுவைக்கு காரில் வந்தார். மரப்பாலம் சந்திப்பில் வந்தபோது வினோதன் உள்பட 9 பேர் காரை நிறுத்தினர்.
பின்னர் கத்தியை காட்டி வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் கடத்தி சென்று தாக்கி அவர்களிடமிருந்த ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.
மேலும் வினோத்சங்கரிடமிருந்து ஏ.டி.எம். கார்டை பறித்து அதன்மூலம் ரூ.1 லட்சத்து 5ஆயிரம் பணத்தையும் எடுத்துக்கொண்டனர். அதுமட்டுமில்லாது வினோத்சங்கரின் அறக்கட்டளை நிர்வாகி முத்துக்குமாருக்கு போன் செய்து ரூ.4 லட்சத்தை கொடுத்தால் வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் விடுவிப்போம் என்று கூறி மிரட்டினர்.
இதையடுத்து முத்துகுமார் திருக்கோவிலூரில் வைத்து ரூ.4 லட்சத்தை வினோதன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கொடுத்து வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் மீட்டு சென்றார்.

இதுகுறித்து வினோத்சங்கர் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வினோதன், வேல்ராம்பட்டை சேர்ந்த கல்விசெல்வம், முகமது பரூக், மகேஷ், பிரபு, அதிகைவாணன் ஆகிய 6 பேர் உடனடியாக கைது செய்தனர்.
அதன்பிறகு அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த அறிவு என்ற அறிவழகன் (28), வேல்ராம்பட்டு விமல் (23) மற்றும் கொம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு என்ற ஜெயசந்திரன் ஆகிய 3 போரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுவை ரோடியர்பேட் கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி ரோல் அந்தோணி (35) என்பவரை தேடி வந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரோல் அந்தோணி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.