கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த மெர்சிலின் என்பவர் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் நம்ப வைத்து ரூபாய் 25,27,700 பெற்று ஏமாற்றியதாக புகார் மனு ஒன்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்தார்.
அவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்ததாகவும், வேலைக்காக சில ஆன்லைன் இணையதளத்தில் பதிவு செய்ததாகவும், அதன் பிறகு சில எண்களில் இருந்து அவரை தொடர்பு கொண்ட நபர் ஜீவன் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை டெல்லியில் நடத்துவதாகவும் விமான நிலைய ஸ்டோர் பராமரிப்பு பணிகள் காலியாக இருப்பதாகவும் அவரை நம்ப வைத்துள்ளனர்.

அவருடைய பேச்சை நம்பிய இளைஞர், அவர்கள் கேட்டபடி பதிவு கட்டணம் காப்பீட்டு கட்டணம் ஜிஎஸ்டி வரி கட்டணம், கமிஷன் கட்டணம் இயக்குனர் கட்டணம், வருமான வரி கட்டணம் என பல்வேறு காரணங்கள் கூறி அவர்கள் கேட்ட 25,27,700 பணத்தை கொடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் இன்னும் பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்கவே இளைஞர் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தார். பின்னர் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் ஆய்வாளர் வசந்தி,உதவி ஆய்வாளர்கள் அஜ்மல் ஜெனிப் , பெர்லின் பிரகாஷ் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளிகள் டெல்லியில் இருப்பது தெரிய வந்தது.
ஆய்வாளர் வசந்தி தலைமையில், டெல்லி சென்ற தமிழக போலீசார் ராம விகார் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவரை டெல்லியில் வைத்து கைது செய்து கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் .