காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசிய விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தை ஜம்மு-காஷீர் பிரசார குழு தலைவராக கட்சியின் தலைமை நியமித்தது. கட்சித் தலைமை அறிவித்த சில மணிநேரத்தில் தனது தலைவர் மற்றும் மாநில விவகாரக் குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது குறித்து குலாம் நபி ஆசாத் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு ராகுல்காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம். காங்கிரஸ் கட்சியில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது அவரது உதவியாளர்களால் தான் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.