காங்கிரஸ் கட்சியின் தலைமை பிரசாரக் குழு ஒன்றை உருவாக்கி தலைவர்களை நியமித்தது. அக்கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். தாரிக் ஹமீத் கர்ரா பிரச்சாரக் குழுவின் துணைத் தலைவராகவும் , ஜி.எம்.சரூரி ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் ‘ பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத், அடுத்த சில மணி நேரத்திலேயே அப்பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். மேலும் அம்மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் விலகியுள்ளார். தனது உடல்நிலை காரணமாகவே இந்த முடிவு என சோனியா காந்திக்கு அவர் கைப்பட கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டியின் பிரசாரக் குழு, அரசியல் விவகாரக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு, விளம்பரம் மற்றும் வெளியீட்டுக் குழு, ஒழுங்குக் குழு மற்றும் பிரதேச தேர்தல் குழு ஆகியவற்றையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்தார்.