சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் : “மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன்-சங்கீதா தம்பதியின் மகள் அக்ஷிதா என்ற 6 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே நிர் பெருக்கெடுத்து ஓடிய வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மகளைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிய போது, வாய்க்காலின் ஓரத்தில் அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கொள்ளிடம் போலீசார், சிறுமியின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.”